கௌரவம், பந்தா, கெத்துன்னு
வார்த்தைகள் மட்டும் தலைமுறைக்குத் தலைமுறை (டிசைன் டிசைனா வர்ற கொரானா மாதிரி)
மாறி, மாறி வந்தாலும், மேலோட்டமா பார்த்தா மீனிங் எல்லாம்
ஒண்ணுதான்.
கல்யாணத்துக்குப் போக பக்கத்து வீட்டிலிருந்து ஓசில
நகைகளை வாங்கி கழுத்து நிறைய(பூனைக்கு மணி கட்டுன மாதிரி!) மாட்டிக்கிட்டு கூடவே
ஹெவி மேக்கப் போட்டுட்டுப் போய், பேய் மாதிரி
போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறது; கையில காசு
இல்லேன்னாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது பசங்களுக்கு மொட்டை அடிச்சி காது
குத்துறது(சம்பாரிக்கிறதெல்லாம் ஜாலியா குடிச்சி செலவு பண்றது, கேள்வி கேட்டா, நான்
சம்பாதிக்கிறேன், குடிக்கிறேன், உங்கப்பன் வீட்டு பணமான்னு? WIFEபை உ(வ)தைக்கிறது); DUEல பைக்
வாங்கினாக்கூட, அதை கொண்டாட 10 மாச டியூ பணத்தை ஒரே நாள்ல ஃபிரண்ட்ஸ்க்கு பார்ட்டி
கொடுத்து தண்ணியா செலவு பண்றது (உஷார்! பெட்ரோல் விலையே பல இடங்கள்ல 100 ரூபாயை
தாண்டிடுச்சி, மைலேஜ் மட்டும் கம்மியா தான் கிடைக்கிது).
இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம், சிக்கனத்தை பத்தி
பக்கம் பக்கமா லெக்சர் கொடுத்தாலும், அக்கனமே அதை இந்த
காதுல வாங்கி அந்த காதுல வெளிய விட்ருவாங்க. விரலுக்கேத்த வீக்கம்னு சொன்னா, விரல்ல ஏதாவது
சுளுக்கு இருக்க போவுது.. நல்ல டாக்டரா போய்ப் பாருங்கன்னு ஃப்ரீ அட்வைஸ் வேற தருவாங்க.
நம்ம கெத்து குமார் கூட அப்படித்தான்.
சுமாரான சம்பளம், அழகான மனைவி, அருமையான ரெண்டு குழந்தைங்க! ஆபீஸ்ல கெத்து காட்ட, தன் முதல்
குழந்தையோட முதல் பிறந்த நாளை ஸ்டார் ஹோட்டல்ல நடத்தினது; தான் பெரிய
தொழில்நுட்ப அறிவாளின்னு(tech-savvy) ஆபீஸ்ல பீத்திக்க
புதுசு புதுசா வர்ற ஃபோன், பைக்ன்னு எல்லாத்தையும்
வாங்குறது(கம்பெனி CEO கூட ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை தான்
ஃபோனை மாத்துவாராம்); தீபாவளிக்கு நகைக்கடை வெச்சுருக்கிற
ஏரியா சேட் 1000வாலா வெடி வெச்சா, போட்டிக்கு 5000வாலா
வெடி வெச்சு வெறுப்பேத்தி கெத்து காட்டி சோசியல் மீடியாவுல லைவ் வீடியோ போடுறது, இந்த மாதிரி கெத்து
காட்டுறதுனால குமாருன்னா ஏரியாவுல கெத்தோ கெத்து.
சம்மர் வெக்கேஷன் ஊட்டி போலாங்கிறது ரொம்ப நாள்
கெத்து கனவு அவனுக்கு. பஸ்ல, டிரைன்ல போனா அவன்
கெத்து என்ன ஆகிறதுன்னு ஆபீஸ் ஃப்ரெண்ட் கிருஷ்ணாகிட்ட ஒரு நாலு நாளைக்கு கார்
வேணும்னு கேட்டான். கிருஷ்ணா ரொம்ப யோசிச்சு,
“மச்சி, சொல்றேன்னு
கோவிச்சுக்காத, காரு வாங்கி இந்த 5 வருஷத்துல ஒரு தடவை கூட வேற யாரையம் டிரைவ் பண்ண
அனுமதிச்சது கிடையாது. உனக்கே தெரியுமே வொர்க் ஷாப்ல ஏதாவது சர்வீஸ்க்கு கொடுத்தா
கூட, மெக்கானிக்கை எங்கூட உட்கார வெச்சிக்கிட்டு நான் மட்டும் தான் கார் ஒட்டி
டெஸ்ட் பண்ணுவேன்..”
என மறுக்க, கிருஷ்ணா ஒரு முறை
மஞ்சள் காமாலை(jaundice) வந்து அவஸ்தை பட்ட போது கிருஷ்ணா மனைவியும் தலைப்
பிரசவத்துக்கு ஊருக்கு அம்மா வீட்டிற்க்கு சென்ற நிலையில், அவனை கூட இருந்து
கவனித்துக் கொண்டது; கிருஷ்ணா செய்ய வேண்டிய வேலையை ஆபீஸில் back-upபாக தான் இருந்து
பார்த்தது என சென்ட்டிமென்டாக பேச, கிருஷ்ணா காரை
கொடுத்து விட்டான்.
சென்னையில் இருந்து ஊட்டி வரை செல்லும் வழியெங்கும் selfie.. சாரி.. சாரி
குடும்பத்தோடு குஷியாக groupie-selfie எடுத்துக் கொண்டான். A/C போடுவது, பாட்டு போடுவது
என்று காரில் உள்ள சகல வசதியையும் சௌகர்யமாய் பயன்படுத்தினான். காருக்கு மட்டும்
பேசத்தெரிந்திருந்தால் அவனிடம் ஏண்டா இப்படி படுத்துறே? என ஸ்பீக்கர்(வாய்)
விட்டு கேட்டு இருக்கும்.
ஊட்டி போகும் வரை எல்லாம் சுபம். ஆனால், அடுத்த நாள் காலை
ஒரு சுப வேளையில் ஒரு PARKக்கை சுற்றிப்
பார்க்க, காரை PARKING பண்ண போய் ஒரு சேறு, சகதியான இடத்தில்
பள்ளத்தில் சிக்கிக்கொண்டது கார். பதட்டத்தில் Acceleratorரை பலமாக அழுத்த
எதிரே உள்ள மரம் ஒன்றில் முட்டி மோதி நின்றது.
ரொம்ப யோசித்து கார் key கொடுத்த நண்பனுக்கு, என்ன பதில் சொல்வது
என்று திகைத்து, ஒரு வழியாக 50 ஆயிரம் செலவு செய்து, சட்டெனப் பார்த்தால்
வெளியே தெரியாத அளவுக்கு டேமேஜ் ஆன பகுதியை mechanic ஷாப் ஒன்றில்
கொடுத்து அங்கு தங்கிய இரண்டு நாட்களில் மாற்றி விட்டான். ஊட்டியிலிருந்து சென்னை
வரும் வரை no song, no AC, no selfie. சென்னை வந்த கையோடு
காரை கிருஷ்ணாவிடம் ஒப்படைத்தான்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு கிருஷ்ணா
கண்ணில் பட்டும் படாதவாறும் ஆபீஸில் நடமாடினான்.
மனசு அடித்து கொண்டது குமாருக்கு! எங்கே, கிருஷ்ணா கார் பற்றி
கேட்டு விடுவானோ என்று. மேலும் தனது பைக் ஒன்றினை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்று
இருந்தான் இன்னொரு நண்பனிடம்(காருக்கு செய்த செலவுக்கு கடனைக் கட்ட).
வீட்டிற்க்கு சென்றால் அவன் மனைவி வேறு வார்த்தையால் வெறுப்பேற்றினால் அவன் நிலைமை புரியாமல்.
ஏங்க, அந்த 50 ஆயிரத்துல.. நம்ம நாலு பேரும் ஃப்ளைட்லேய கோயம்புத்தூர் போய் அங்கிருந்து கார் புடிச்சு போய் போயிருக்கலாம்ல.. செம்ம கெத்தா இருந்திருக்கும்..
ம்ம்.. டிரைன்ல போயிருந்தா இன்னும் சூப்பராவே
இருந்திருக்கும். விரலுக்கேத்த வீக்கம் வேணும்..
என்று முதல் முறையாக கெத்து எல்லாம் வெத்து என்பகை
உணர்ந்து வார்த்தை உதித்தான்.
ரெண்டு நாட்களாக கிருஷ்ணா ஆபீஸ் வரவில்லை. ஃபோன்
போட்டு கேட்க கூட குமார் யோசித்தான். கண்டுப்புடிச்சிருப்பானோ..
மூன்றாவது நாள் ஆபீஸ் கேம்பஸில் நடந்து வரும் போது, கார் ஒன்றின் ஹாரன்
சத்தம் கேட்டு திரும்பினான். புத்தம் புது கார் ஒன்றில் கிருஷ்ணா..
“புது கார் மச்சி.. அந்த பழைய காரை வித்துட்டேன். 1.5க்கு ஒரு offer வந்துச்சு.. IN FACT,
அந்த காரோட WORTHத்தே 1 லாக்(LAKH) தான் பொறும்
இப்போதைக்கு.. ஈவினிங் பார்ட்டிக்கு வந்திடு”
என சொல்லிவிட்டு காரை ஆபீஸ் கிரவுண்ட்
பார்க்கிங் பக்கம் செலுத்தினான் கிருஷ்ணா.
ஆமாமாம்... அந்த காரோட WORTH ஒன் லாக் தான்,.. நான் போட்ட பணம் 50 ஆயிரத்தையும் சேத்து
தான் 1.5க்கு போயிருக்கும்.. என தனக்கு தானே சொல்லிக்கொண்டே வேலைய பார்க்கப்போனான்
நம்ம குமாரு.
கருத்துகள்
கருத்துரையிடுக