“கொடி என்பது ஒரு நாட்டின், இனத்தின், நாகரீகத்தின், வளத்தின் அடையாளம். சேர, சோழ, பாண்டியர்கள் முதல் நம் தேசத்தை ஆண்ட பல மன்னர்களும் தங்களுக்கென ஒரு கொடியை பயன்படுத்தி வந்தனர். அந்த கொடிகள் தேசப்பற்றை ஊற்றுவதற்க்கும், நாட்டின் பெருமையை போற்றுவதற்க்கும், ஒற்றுமையை பேணவும் உதவியது. நமது மூவர்ண தேசியக்கொடியும் அப்படித்தான்.. “
.. என்று தன் வீட்டினுள் ஆளுயர கண்ணாடி
முன் நின்று, மிடுக்காக மிலிட்டரி ஆடை அணிந்த மேஜர் சரவணன், தான் சுதந்திர தின
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பள்ளியில், தேசிய கொடியை ஏற்றி
விட்டு என்ன பேசுவது என ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்க,
“சார்! கார் ரெடி!”
என்று குறுக்கிட்ட கார் ஒட்டுனர் குரல் கேட்டு புன்னகையுடன் காரில் ஏறி
கிளம்பினார்.
“மாணவர்களே, நீங்கள் சிறு
வயதிலேயே உடலளவிலும், மனதளவிலும் நாட்டுக்கு சேவையாற்ற தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கெல்லாம் ஒன்று தெரியுமா? சைனிக் (Sainik) பள்ளிகள் என்று
நாம் நாட்டில் தற்போது 34 இடங்களில் பள்ளிகள் உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்கள்
கல்வியோடு தேசப்பணிக்கும் ஆயத்தமாகிறார்கள். உங்களுக்கெல்லாம் அந்த வாய்ப்பில்லை
என்ற கவலை வேண்டாம். ஏனெனில் உங்கள் பள்ளியிலும் செயல்படும் NCC, NSS, இதை அடிப்படையாக
கொண்டு தான் இயங்குகிறது. அதில் உங்களை நீங்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள
வேண்டும். கல்லூரியிலும் கூட.. “
.. என்று மீண்டும் காரின் பின் இருக்கையில் அமர்ந்து, ஒத்திகை பார்த்து வர,
சார்! ஸ்கூல் வந்திருச்சி!
என ஒட்டுனர் கூறியதும், அவருக்கு நன்றி
சொல்லிவிட்டு இறங்கி, விருவிருவென வீறு நடையுடன் பள்ளி மாணவர்கள் குழு, மற்றும் ஆசிரியர்கள்
குழு தந்த சிறப்பான வரவேற்பை பெற்றுக்கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று
அறிமுகப் படலங்கள், உபசரிப்புகள் முடிந்து பிரேயருக்கு சென்றார்.
உற்சாகமாக பிரேயர் ஆரம்பமானது. கொடியேற்றும் அந்த தருணம் வர, மேஜர் சரவணன்
மிடுக்காக சென்று, கொடிகம்பத்தின் கீழ் கம்பீரமாக நின்று, மலர்கள் உள் வைத்து
மடித்து கட்டப்பட்ட கொடியின் கயிற்றை லாவகமாக உருவி கொடியை ஏற்ற, நான்கு அடிக்கு மேல்
எறியிருந்த நிலையில் கொடியின் கயிறு, தீடீரென
கொடிக்கம்பத்தின் மேலிருந்த உருளையில் சிக்கி அறுந்து கொள்ள, மேஜர் மீது மலர்
அபிஷேகம் நடந்து, கொடியும் அவர் மேல் போர்வை போல் படர்ந்தது.
கூடியிருந்த அனைவரும் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தனர். சில குறும்பான மாணவர்கள்
நமட்டு சிரிப்பு சிரித்தனர். கயிற்றை சரியாக காட்டாத வாட்ச்மேனை ஆசிரியர்கள்
கடிந்து கொள்ள, வாட்ச்மேன் முருகேசன் கொடியின் கயிற்றை சரி செய்யும் முயற்சியில் இறங்க,
அங்கு நிலவிய ஒரு அசாதாரண சூழலில், மேஜர் மாணவர்களை
நோக்கி உரையாற்ற துவங்கினார்.
“ராணுவத்துல ஒரு நடைமுறை இருக்கு. ஒரு வீரர்
நாட்டுக்காக உயிர் துறந்துட்டா, அவர் உடல் மேல தேசிய
கொடியை போர்த்தி மரியாதை செய்வாங்க.. அந்த மரியாதை எனக்கு இங்க உயிரோட இருக்கும்
போதே கிடைச்சிருக்கு... ”
என்றதும், மாணவர்கள் கை
தட்டினர். ஆசிரியர்கள் பெருமையோடு பார்த்தனர். வாட்ச்மேன் கொடியின் கையிற்றை
சரியாக கட்டி விட்டு மேஜருக்கு சல்யூட் வைத்தார். தயார் படுத்திய உரையை விட இந்த
திடீர் உரை முத்தாய்ப்பாய் அமைந்தது.
ஜெய் ஹிந்த்!
-------------------------------------------------------
முற்றும் ----------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக