உதவி வேணுமா உதவி?

                                           

உதவிகள் பலவிதம். அதை செய்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ர(ரா)கம். சிலர் நண்பர்களுக்கு(ள்) உதவி செய்வார்கள். பலர் தங்கள் உயரதிகாரிகளுக்கு வேலை செய்வார்கள் (அதை காக்க பிடிப்பது, சோப்பு போடுவது என்றும் கூறலாம்).  இன்னும் சிலரோ, மனைவிக்கு எடுபிடி, ஒத்தாசை என்று வாழ்நாள் முழுக்க உதவுவதும் உண்டு.

  அதில் நம்ம கோபால் வேறு ரகம். அவன் உதவியில் எப்போதும் ஒரு சமூக அக்கறை இருக்கும். அவசர இரத்த உதவி கேட்டு வரும் குறுஞ்செய்திகளை Whatsappல் பார்வேர்ட் செய்வது [காலத்தினால் செய்த குறு(குருதி) உதவி].  ரோட்டில் வாக்கிங் செல்லும்போது பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளை  அனுசரணையுடனும், அன்புடனும் அழைத்து சென்று ரோட்டை கிராஸ் செய்வது (ஏதோ வீடு  வரை சென்று உதவியது போன்று அன்று முழுவதும் புளகாங்கிதம் அடைவான்). பால்ய வயது முதலே பெரியவர்களுக்கு பேருந்தில் இருக்கையை விட்டு தருவது, Bankங்கில் பணம் எடுக்க ஃபார்ம் ஃபில்-அப் பண்ணி தருவது,..

  எங்காவது, அன்ன தானம் நடைபெற்றால், கியூவில் கால்கடுக்க நின்று அதை வாங்கி, அந்த ஏரியா பிச்சைக்காரர்களுக்கு தானம் அளிப்பது(ஆளானப்பட்ட கர்ணன் கூட தர்ம சாலைக்கு செல்லும் வழியை மட்டும் தான் தன் விரல் நீட்டி சொல்லியதாக புராணம் கூறுகிறது), இப்படியாக, நம்ம கோபலின் உதவிகள், நாம் வீட்டு மாதாந்திர மாளிகை பில் போல நீ.. ண்.. டு கொண்டே இருக்கும்.

 கிட்டத்தட்ட தன் வாழ் நாளில் 20 வருடம் இப்படி கழித்த கோபாலுக்கு அன்று ஒரு நாள், ஆகச்சிறப்பான  சம்பவம் ஒன்று நடந்தது.

 அன்று காலை வழக்கம் போல் தயாராகி, தனது டூவீலரில் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு சிறுவன் (நைந்து போன உடையுடன் ஏதோ ஒர்க் ஷாப்பில் வேலை செய்யும் சிறுவன் போல, சிறார் தொழிலாளரா? என்றெல்லாம் கேட்காதீர்கள்!) கையை நீட்டி, கட்டை விரலை ஆட்டி, லிப்ட் கேட்டான்.

கோபால் ஆபீஸ் போகும் வழியில் மூன்று கிலோமீட்டர் தூரம் தள்ளி இறங்க வேண்டும் என்று கேட்டதால், உடனே வண்டியில் ஏற்றி(று)க் கொண்டான்.  மெல்ல, அந்த பையனிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே சென்றான்.  ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே கடந்து இருந்த நிலையில், வண்டியை நிறுத்த சொல்லி சிறுவன் இறங்கிக் கொண்டான்.

அதுக்குள்ள இறங்கிட்டேயே ஏன்?

என்ற கோபாலின் கேள்விக்கு அச்சிறுவன்,

“சார்..  ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட போகல .. அதுக்குள்ள உங்க பர்ஸ் பத்திரமா இருக்கான்னு பத்து தடவை பின்னாடி பாக்கெட்டை தடவிப் பார்த்து செக் பண்ணிட்டீங்க..”

என்று கூறிவிட்டு அவன் பதிலை எதிர்பாராமல் விடுவிடுவென நடந்து முன்னால் சென்று கொண்டிருந்தான் .

பேய் அறைந்த மாதிரி கோபால் நின்றான். தன் கேரக்டருக்கு வந்த சத்தியசோதனை.  

 யாருக்கு தெரியும்? ஒரு நாள் அந்த கோபாலும் காந்தியைப்போல் சத்திய சோதனை என்ற சுயசரிதை எழுதக்கூடும். அதில் அவன் சந்தித்த அந்த சிறுவன் சிந்திக்க வைத்தது முக்கியமான திருப்பமாக அவன் வாழ்வில் இருக்கக்கூடும்.

 


-------------------------------------------------------------------------முற்றும்-------------------------------------------------

கருத்துகள்