முழுக்க முழுக்க கற்பனையே!

 மேடையில் ஒரு விழாவில் ஒரு அமைச்சர் பேசும் காட்சி

 வண்டை வண்டையாக திட்டு வாங்கி கொண்டு சோர்ந்து போய் வானத்தையே வெறித்து பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சி எம்எல்ஏ அவர்களே!

 எவ்வளவு தான் காறி முகத்தில் உமிழ்ந்தாலும் முகத்தை துடைத்துவிட்டு மங்களகரமாக பொட்டு வைத்துக்கொண்டு பற்கள் 32ம் தெரிய பாசாங்கு காட்டி அமர்ந்திருக்கும் தேசிய கட்சியின் பிரதிநிதியான விழா விருந்தாளி அவர்களே!

 இங்கு கூடியிருக்கும் குடிமகன்களே! அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே நான் திறந்து வைக்கும் தண்ணீர் தொட்டி ஒரு அசாதாரண தண்ணீர் தொட்டி. அதிசயமான தண்ணீர் தொட்டி. இன்றைக்கு ஆசியாவிலேயே, ஏன் உலகத்திலேயே, எங்கும் காணப்படாத முதல் தொட்டி.. . முதல்தரமான தொட்டி.  5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது..  இது தாய்மார்கள் கண்ணீர் போக்கும் ஒரு சிறப்பு கூட்டு தண்ணீர் திட்டம் எனக் கூறலாம்.  

இந்த பேரிடர் காலத்தில், பல மருத்துவமனைகள் கட்டப்படும் வேளையில்  செலவோடு செலவாக, இந்த அசாதாரண தண்ணீர் தொட்டியை கட்டியதன் நோக்கம்..  காரணம்..  என்னவெனில், நீங்கள் படும் பாட்டை எண்ணித்தான்..

லாக் டவுனில், லாக்-அப்பில் இருப்பதைப் போல உணரும் பல குடிமகன்கள், இன்றைக்கு அண்டை மாநில பார்கள் வாசலில் பிச்சைக்காரர்கள் போல் கூடி நிற்பதை காண சகிக்கவில்லை.

 குப்பைகளை கிளறிக் கிளறி, பழைய பாட்டில்களில் மீதம் இருப்பதை நீங்கள் குடிப்பதை தொலைக்காட்சியில் பார்க்கும் போது எங்களுக்கு வாந்தி வருகிறது. கள்ளச்சாராயம் என்ற பெயரில் கண்டதை காய்ச்சி சுண்ட வைத்து குடிப்பதால் உங்கள் குடல் புண்ணாவது போன்று எங்கள் மனமும் புண்ணாகிறது   

எனவேதான், இந்த சிறப்பு தண்ணீர் தொட்டி.  இந்த கூட்டு தண்ணீர் தொட்டியில் சிறப்பு தண்ணீரை நீங்கள் பருக விரும்பினால், நான்கைந்து பேருக்கு ரூபாய் 150 போதும். நான்கைந்து பேர் கொண்ட குழுவிற்கு ஒரு குடமும், சால்ட் அண்ட் பெப்பர் போட்ட அரை கிலோ வறுத்த கடலையும், டோக்கனும்  வழங்கப்படும்.

தொட்டியில் இருந்து சர்ரென பைப் வழியே சீறிப்பாயும் இந்த சிறப்பு தண்ணீர், காக்டைல், mocktail போன்று “ஷாக்டெய்ல்” என்று நாமகாரணத்துடன் அழைக்கப்படும்.  பல சிறப்பு மிக்க இந்த தண்ணீரை சிந்தாமல், சிதறாமல் நீங்கள் குழாயிலிருந்து குடத்தில் பிடித்து, இந்த புதுமையான ஆண்டி- போதை-ஆல்கஹாலை எங்கு சென்று வேண்டுமானாலும் தைரியமாக பருகலாம். நோ பார் (NO BAR).

 இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், சிகரெட் பிடிப்பதை நிறுத்த இ-சிகரெட் என ஒன்று இருப்பதை போல் இந்த ஆண்டி-போதை-ஆல்கஹால் செயல்படும். போதை இருப்பது போல் இருக்கும் ஆனால் இருக்காது என்று ஆய்வுக் குழு அறிவித்துள்ளது. அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் Antibiotic போல இந்த ஆண்டி-போதை-ஆல்கஹால் இது அங்கீகரிக்கப்பட்டது.

 எவ்வளவு ‘சப்’பென்று இருக்குமோ, அந்த அளவிற்கு ‘சப்’பென்று இருக்கும் தன்மை கொண்டது. பல ‘சிப்’கள் அடிப்பவர்கள் கூட சில சிப்’கள் அடித்தவுடன் “கப்சிப்” என ஆகி விடுவர்.  நாள்பட, நாள்பட இதனை குடிப்பதன் மூலம் இவ்வளவு நல்லவரா நீங்கள்? என குடும்பம் மெச்சும் (man)மேன்மக(கா)னாக மாறிவிடுவீர்கள்.. உடல் தேறி விடுவீர்கள்..

 பிரெஞ்ச்-ல் பிளாசிபோ என்ற ஒன்றைக் கூறுவார்கள்.. (கூட்டத்தில் ஒருவன்:  சார்! அது இங்கிலீஷ், என கூற)

மன்னிக்கவும்..  என்ன ஆபிசர் சரியா ப்ரூஃப் பாக்கலையா?

ஆங்கிலத்திலே placebo(பிளாசிபோ) என்று ஒன்றை குறிப்பிடுவார்கள் அதாவது, வெறும் சர்க்கரை அடங்கிய மருந்தை சாப்பிட்டு விட்டு சில நோயாளிகள் உண்மையான நோய்க்கு மருந்து சாப்பிட்டது போன்ற உணர்வை பெறுவார்கள்.  அதை போன்று இந்த ஆண்டி-போதை-ஆல்கஹாலும் செயல்படும்.  ஆனால் இதை குடித்துவிட்டு, ஏதோ  மிதமிஞ்சிய சரக்கு அருந்தியது போல், போதையில் அலப்பறை செய்பவர்கள், அலேக்காக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சித்த மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அவர்களின் சித்தம், பித்தம் முற்றிலும் தெளிவிக்கப்படும்.

இது சிறப்பாக செயல்படும் பட்சத்தில், இத்திட்டம் “தாலி காக்கும் வேலி” என்றழைக்கப்படும்.  பல பெண்களின் தாலி பாக்கியம் நிலைக்க இது ஒரு தொலைநோக்கு திட்டம்.

 ஆக, குப்பையை கிளறுவதையும், கண்டதை காய்ச்சியும், எல்லை விட்டு எல்லை சென்று எல்லை மீறி குடித்து விட்டு, என் பணி குடித்து விட்டு கிடப்பதே என வாழும் குடிமகன்களே! உங்கள் அனைவருக்கும் இத்திட்டம் சமர்ப்பணம்.  நன்றி.. வணக்கம். வாழிய தமிழ்.



---------------------------------------------------------------------------- முற்றும் ----------------------------------

கருத்துகள்

கருத்துரையிடுக